Pages

Wednesday 9 February 2011

மானமுள்ள தமிழன்...

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு..செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில்மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு

அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.
  
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.

முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
 “நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
 பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான். இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.


 சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
 வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?  அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’
என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில்கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

 மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
 லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

(குறிப்பு : இச்செய்தி மின்னஞ்சலில் எனக்கு வந்தது )

Saturday 5 February 2011

எம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்...

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24&ம்தேதி 23&ஆண்டு நினைவுநாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா... உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு...’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின் பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்... 

1987 டிசம்பர் 2...

ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.
டிசம்பர் 5...

அம்பிகா, ராதா நடித்த திரைப்பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர். கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம் விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில் நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.

டிசம்பர் 6...
சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்... என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை...’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்...’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 15..

எம்.ஜி.ஆர் மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.

டிசம்பர் 20...

ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு  சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார், ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு  கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா... நான் கையெழுத்துப் போட்டு அனுமதி தரேன்...’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்...’’ என்று கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச்  சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 22...
சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல் உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில் அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார், எம்.ஜி.ஆர்.  

டிசம்பர் 23...

மதியம் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான் கலந்து கொள்ள மாட்டேன்...’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார், எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்... கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம் பூண்டது.

டிசம்பர் 24...

அதிகாலை நேரம், ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்...’ சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை.

நன்றி : விகடன் (இந்த கட்டுரை விகடனில் வந்தது 
)